கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு மேற்கொள்வது எப்போது? என்பது குறித்து பதிலளிக்க அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை.
மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கீழடி பகுதியில் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 2 கட்ட அகழாய்வில் ஈடுபட்டனர். அதில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து அவர் அறிக்கை தயாரித்தார். ஆனால் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக்கூடாது என்றும், அந்த அறிக்கையை பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர்தான் தயார் செய்ய வேண்டும் என்றும் கடந்த 3–ந் தேதி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது. பொதுவாக, யார் அகழாய்வு செய்தாரோ அவர் தான் ஆய்வறிக்கையும் தயார் செய்ய வேண்டும். எனவே அமர்நாத் ராமகிருஷ்ணனே ஆய்வறிக்கை தயார் செய்ய உத்தரவிட வேண்டும். கீழடியில் கிடைத்த பொருட்களை லண்டன் ஆய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோல சென்னையை சேர்ந்த கனிமொழிமதி தாக்கல் செய்த மனுவில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு மேற்கொள்வது எப்போது?, ஏற்கனவே அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரிகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.