தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெறும் போட்டிகளில் அதிக மாணவ– மாணவிகளை பங்கு பெறச் செய்ய வேண்டும்


தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெறும் போட்டிகளில் அதிக மாணவ– மாணவிகளை பங்கு பெறச் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 10 Nov 2018 12:00 AM GMT (Updated: 9 Nov 2018 11:58 PM GMT)

தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெறும் போட்டிகளில் அதிக மாணவ–மாணவிகளை பங்கு பெறச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110–வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி தி.மு.க. தெற்கு மாநிலத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி வருகிற 18–ந் தேதி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனூஸ், துணை அமைப்பாளர்கள் சந்திரமவுலி, கதிரவன், வெங்கடாஜலபதி, ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க.சார்பில் நடைபெறும் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் அதிக மாணவ, மாணவிகளை பங்குபெற செய்ய வேண்டும். புதுச்சேரி தெற்கு மாநிலத்திற்கு உட்பட்ட 12 தொகுதிகளில் மாநில இளைஞர் அணி சார்பில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

வேகமாக பரவிவரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் 12 தொகுதிகளிலும் மருத்துவர் அணி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.

புதுவை அரசு சார்பு நிறுவனங்களில் பணி செய்து வரும் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத வகையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் இலவச அரிசி, துணிகளுக்கு பதிலாக பணம் வழங்கும் யோசனையை கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் அரசு அனைத்து ரே‌ஷன்கார்டுகளுக்கும் பணம் வழங்கியது. இது பலருக்கு இன்னும் சென்று சேரவில்லை. எனவே விடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு அந்த பணத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story