வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - முதல் அமைச்சர் நாராயணசாமி பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நாளை காங்கிரஸ் கட்சி கருப்பு தினமாக அறிவித்துள்ளது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு முடிவை எடுத்தார். அப்போது கருப்பு பணம், தீவிரவாதிகளிடம் உள்ள பணம், கள்ளநோட்டு ஒழியும் என்றார். இந்த திட்டத்தை அறிவித்த உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று கூறினார். அதேபோல் தற்போது நாட்டின் பொருளாதாரம் 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வங்கிகளின் முன்பு காத்துநின்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 119 பேர் உயிரிழந்தனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது. காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் நடக்கிறது என்று புகார் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர்தான் இந்த நாட்டிற்காக தன் உயிரை இழந்துள்ளனர். பா.ஜ.க.வில் நாட்டிற்காக உயிரை இழந்தவர்கள் யாராவது உள்ளனரா?
பா.ஜ.க. அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுவையில் ஒரு எம்.பி. தொகுதி உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமராக நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும். புதுவை சட்டமன்ற தட்டாஞ்சாவடி தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் யார் போட்டியிடுகின்றார்களோ அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சப்தகிரி சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது வங்கிகளில் வரிசையில் காத்து நின்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தலைமை தபால் நிலையத்தில் இருந்து செஞ்சி சாலை நோக்கி சென்றனர். அங்கு ஒரு தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.