பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயம்; போலீசார் விசாரணை


பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயம்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Nov 2018 3:15 AM IST (Updated: 11 Nov 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயமாகிவிட்டதாக வந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒய்யாங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

பவானியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் பள்ளியறையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட, சுமார் 1 அடி உயர சொக்கன்–சொக்கி சிலைகள் இருந்தன. இதில் சொக்கன் என்பது சிவபெருமானையும், சொக்கி என்பது வேதநாயகி அம்மனை குறிக்கும். இந்த சிலைகள் கடந்த 1990–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3–ந் தேதி திடீரென மாயமாகிவிட்டது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பவானி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கை போலீசார் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர். எனவே மாயமான பழமையான சொக்கன், சொக்கி சிலைகளை கண்டுபிடித்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், அந்த 2 சிலைகளும் கோவிலில் இருந்த விவரம் குறித்து விளக்கம் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். இதுதவிர கோவிலில் தற்போது இருக்கும் சிலைகள் எத்தனை? அவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை? என்ற விவரங்களையும் சேகரித்தார்கள்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சங்கமேஸ்வரர் கோவிலில் திடீர் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story