பயன்படுத்திய ஊசிகளை திறந்த வெளியில் வீசிய ரத்த பரிசோதனை நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


பயன்படுத்திய ஊசிகளை திறந்த வெளியில் வீசிய ரத்த பரிசோதனை நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:34 PM GMT)

உடுமலையில் பயன்படுத்திய ஊசிகளை திறந்த வெளியில் வீசிய ரத்த பரிசோதனை நிலையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

உடுமலை,

உடுமலை நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மருத்துவ மனைகள், ஆய்வகங்கள், ரத்த பரிசோதனை நிலையம், ஆகியவற்றில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

அப்படி இருந்தும் மருத்துவ கழிவுகளை நகராட்சி திடக்கழிவுகளில் அப்புறப்படுத்துவது ஆய்வில் கண்டறியப்பட்டு கடந்த ஆண்டு ரூ.75 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பின்னர் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உடுமலை கச்சேரி வீதியில் அரசு அரசுஆஸ்பத்திரி அருகே திறந்த வெளியில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் வீசப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ராஜகோபால் உத்தரவின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், ஆறுமுகம், செல்வக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அங்குள்ள ஒரு பரிசோதனை நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளை திறந்தவெளியில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரத்த பரிசோதனை நிலையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அனைத்து ஆய்வகங்கள், ரத்த பரிசோதனை நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து இனிமேல் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன், மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story