“ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி நடத்துகிறார்கள்” - ஆண்டிப்பட்டி உண்ணாவிரதத்தில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


“ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி நடத்துகிறார்கள்” - ஆண்டிப்பட்டி உண்ணாவிரதத்தில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:30 PM GMT (Updated: 10 Nov 2018 10:24 PM GMT)

கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு ஜெயலலிதா பெயரில் போலி ஆட்சி நடத்துகிறார்கள் என்று ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தேனி,

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மக்களுக்கான வளர்ச்சிப்பணிகள் செய்யப்படாமல் உள்ளதாக அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் தமிழக அரசை கண்டித்தும், வளர்ச்சித் திட்டப்பணிகள் செய்ய வலியுறுத்தியும் அ.ம.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார்.

இதில் மாநில மருத்துவ அணி தலைவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான கதிர்காமு, கர்நாடக மாநில பொதுச்செயலாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்காக வைகை அணை சாலையில் உண்ணாவிரத பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தலில் இடமின்றி பலரும் சாலையில் திரண்டு நின்றனர். இதையடுத்து சாலையில் இருக்கைகள் போடப்பட்டு உண்ணாவிரதத்தில் பலர் பங்கேற்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இந்த போராட்டத்தை முடித்துவைக்க மாநில துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மாலை 5 மணியளவில் வந்தார். அவர், உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக செயல்படுகின்றனர்.

அதை கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் இங்கே மக்கள் திரண்டு வந்துள்ளனர். ஜெயலலிதாவின் பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போலியான ஆட்சி நடத்துகின்றனர். கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துவிட்டு யாருக்கோ பயந்து ஆட்சி செய்கிறார்கள்.

20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி ஆட்சி மாற்றம் செய்ய மக்கள் தயாராகிவிட்டனர். கட்சியும், சின்னமும், பெயரும் மட்டும் இருந்தால் போதாது. இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவாக மக்கள் பார்த்தனர். இன்று துரோகிகளின் சின்னமாக பார்க்கின்றனர். அன்று வெற்றியின் சின்னமாக இருந்தது. இன்று துரோகத்தின் சின்னமாக மக்களால் பார்க்கப்படுகிறது. அதனால் எங்கு சென்றாலும் வெற்றியின் சின்னமாக குக்கரை மக்கள் காட்டுகிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது சரி என்று நீதிமன்றம் சொன்னாலும், தவறு என்று மக்கள் நிரூபிப்பார்கள். இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவு செய்யப்படும். அதற்குள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூவுலகின் நண்பர்கள் என்ற சமூக நல அமைப்பினர் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடை கேட்டு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டார்கள். அரசு பாராமுகம் காட்டி வாதிடாமல் விட்டதால், தடை விதிக்காமல் வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டம் தமிழகத்துக்கு, குறிப்பாக தேனி மாவட்டத்துக்கு பெரும் ஆபத்தானது. இதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாருமே கண்டுகொள்ளவில்லை. கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தமிழக ஆட்சியாளர்கள் தடுக்காவிட்டால் தேனி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிவதோடு, விவசாயமும் பாதிக்கப்படும் என எச்சரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

போராட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேவாரம் சாந்தி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சுமதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர் சுரேஷ், தவச்செல்வம், கம்பம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, நகர செயலாளர் பாலு, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தங்க முருகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜமாணிக்கம், கிளைக்கழக செயலாளர்கள் காட்டுராஜா, பரமன், கோவில்பட்டி ஊராட்சி செயலாளர் தவசெல்வம், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பொன் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாலசந்திரன், பழனி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேகர், எஸ்.எஸ்.புரம் கிளை செயலாளர் அய்யணன், பிச்சம்பட்டி மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் - புகழேந்தி சவால்

ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் கர்நாடக மாநில அ.ம.மு.க. பொதுச்செயலாளர் புகழேந்தி பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தின் 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால் அனைத்து தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை நம்பி போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார். கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்து உள்ளது. கர்நாடகத்தில் இனிமேல் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. கேரள மாநிலத்தில் பா.ஜ.க. எப்போதுமே ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அக்கட்சிக்கு நோட்டாவுடன் தான் போட்டி. இவ்வாறு அவர் கூறினார்.





Next Story