மானாமதுரை பகுதிகளில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் அதிகரிக்கும் விபத்துகள்; போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


மானாமதுரை பகுதிகளில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் அதிகரிக்கும் விபத்துகள்; போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதிகளில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடிவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் விதிகளை மீறி தாறுமாறாக இயக்கப்படும் ஒரு சில ஆட்டோக்களால் தினமும் விபத்துகள் நடந்து வருகின்றன. மானாமதுரையில் உள்ள புது மற்றும் பழைய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பல ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோ முறையில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் குறைந்த கட்டணம் என்பதால் வேறு வழியின்றி ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.

மானாமதுரை நகர்ப்பகுதியினுள் டவுன் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. எனவே ஆட்டோக்களை நம்பியே பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். அதில் ஒரு சில ஆட்டோக்கள் விதிகளை மீறி தாறுமாறாக இயக்கப்படுகின்றன. அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான முறையான உரிமம், வாகன உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எவ்விதமான ஆவணங்களும் இல்லை. ஆனால் ஆட்டோக்களை அதிவேகத்தில் இயக்கி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.

ரோட்டில் செல்லும் போதே, சிக்னல் காண்பிக்காமல் திடீரென திரும்புவது. இடையில் யாராவது கைகாட்டினால் உடனடியாக நிறுத்தி மற்ற வாகனங்களை தடுமாற வைப்பது, அளவிற்கு அதிகமான ஆட்களை ஏற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. திடீரென்று சாலையில் செல்லும் போது நடுரோட்டில் ஆட்களை ஏற்றுவதற்காக பிரேக் போடுவதால், பின்னால் வரும் இரு சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும், ஆட்டோக்களை சோதனை செய்யாததால், சில ஆட்டோக்களில் ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் உள்ளுர் ஆட்டோக்களாக இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும், விதிகளை மீறி ஆட்டோக்களை தாறுமாறாக இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story