பஞ்சாயத்தால் மூதாட்டி சாவா? போலீசார் விசாரணை


பஞ்சாயத்தால் மூதாட்டி சாவா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 8:17 PM GMT)

பஞ்சாயத்தால் மூதாட்டி சாவா? போலீசார் விசாரணை.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 80). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி(50). நல்லம்மாள் அவ்வப்போது பொன்னுசாமியின் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பொன்னுசாமியின் வீட்டில் 10 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து பொன்னுசாமியின் குடும்பத்தினருக்கு நல்லம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நல்லம்மாள் மகன் பாபுவை அழைத்து உங்கள் தாய் தான் நகையை திருடி விட்டார் எனக் கூறி பஞ்சாயத்து பேசி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராத தொகையை 2 மாதத்தில் செலுத்தி விடுவதாக பாபு ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை நல்லம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென வீட்டிலேயே இறந்து விட்டார். இதனை தொடர்ந்து பாபு அரும்பாவூர் போலீசில் தனது தாயின் சாவுக்கு பொன்னுசாமியின் குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம் எனக்கூறி புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story