ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம் அமைச்சர் தகவல்


ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 9:17 PM GMT)

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருச்சி,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள், தொழிலாளர்கள் வரை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

இதில் தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், குழுபோட்டிகளில் வெற்றி பெற்ற மண்டல வாரியான அணிகளுக்கு கோப்பைகள், கேடயங்கள் மற்றும் சான்றிழ்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு துல்லியமான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிகிறது. இந்தியாவிலேயே கணினி முறையில் பொதுவினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரே மாநிலம் தமிழகம் தான். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்திற்காக ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அவர் காட்டிய வழியில் இன்று வரை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தரமான அத்தியாவசிய பொருட்களை இந்த அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் டி.ரத்தினவேல், ப.குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதா தேவி, மண்டல மேலாளர் சிற்றரசு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் காமராஜ் ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை மேட்டுப்பகுதியில் உள்ள கிட்டங்கிகளுக்கு மாற்றம் செய்து வருகிறோம். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் பொதுவினியோகத்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருத்தங்கள் தொடர்பாக இதுவரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 7 லட்சத்து 26 ஆயிரத்து 112 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என்றார்.

Next Story