கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு கடை, வீடுகளை அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம், ஆதமங்கலம்புதூர், வெங்கட்டம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு கடை மற்றும் வீடுகளை சிலர் கட்டி உள்ளனர். இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு இடையூறுகளும் இருந்து வந்தது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது சம்பந்தமான நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
இதில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நெடுஞ்சாலைதுறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
நேற்றும் இந்த பணியில் ஈடுபடுவதற்காக பணியாளர்களுடன் அதிகாரிகள் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் அகற்றப்பட உள்ள வீடுகளில் வசிப்போர் ஆதமங்கலம்புதூர் பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேட்டவரம்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.