கஜா புயல் எதிரொலி: பாம்பனில் அலைகள் குறைந்து கடல் அமைதியானதால் பரபரப்பு


கஜா புயல் எதிரொலி: பாம்பனில் அலைகள் குறைந்து கடல் அமைதியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:45 AM IST (Updated: 13 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பாம்பனில் வழக்கத்துக்கு மாறாக கடல் திடீரென அமைதி நிலைக்கு மாறியது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேசுவரம்,

வங்கக்கடலில் அந்தமான் அருகே கஜா புயல் உருவாகி உள்ளது. இதையடுத்து கடற்கரை மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ராமேசுவரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலில் படகுகள் நிறுத்தப்பட்டு, துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்பட்டாலும், பாம்பன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக திடீரென கடல் அமைதியாகி குளம் போன்று காட்சி அளித்தது.

இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்கள் கூறும் போது, “கடலில் அலைகள் எப்போதும் போல் இருந்தால் நாங்கள் கவலைகொள்ள மாட்டோம். சில நேரம் சீற்றமாகக்கூட இருக்கும். ஆனால் அமைதியாக இருக்கும் நாட்கள்தான் எங்களுக்கு அதிக கவலையை கொடுக்கும். பாம்பனில் கடல் அமைதியாக காணப்படுவதை காணும் போது அச்சமாக உள்ளது“ என்றனர். கஜா புயல் வலுவடைந்து வருவதையொட்டி கடலோர காவல்படையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தாசில்தார்கள் சந்திரன், ஜபார் ஆகியோர் கூறியதாவது:–

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பகங்கள் தயார் நிலையில் உள்ளன.

கடலோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story