கோவை அருகே: டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3 லட்சம் கொள்ளை
கோவை அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
சூலூர்,
கோவை சூலூர் அருகே, காங்கேயம்பாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் திருப்பூர் பெதப்பம்பட்டியை சேர்ந்த வேலுசாமி (வயது 36), தர்மபுரியை சேர்ந்த ஜெகதீஷ் (38) ஆகியோர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு மொபட்டில் தங்களது அறைக்கு புறப்பட் டனர்.
சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே இரவு 11 மணியளவில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவர்களை வழி மறித்து இருவரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ஜெகதீஷ், வேலுசாமி ஆகியோர் நிலைகுலைந்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பணப்பையை மர்ம ஆசாமிகள் பறிக்க முயன்றனர்.
பணத்தை பறிகொடுக்காமல் இருக்க ஊழியர்கள் இருவரும் பையை இறுக்கிப்பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த கும்பல் கத்தியால் வேலுசாமி, ஜெகதீசை குத்தினர். இதில் அவர்கள் காயம் அடைந்து கீழே விழுந்தனர். உடனே ரூ.3 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் வேலுசாமி, ஜெகதீசை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் 2 ஊழியர்களின் மார்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்துள்ளதாகவும், அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை பற்றிய தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கொள்ளையர்கள் 4 பேரும் லுங்கி, பனியன் அணிந்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் சூப்பர்வைசர் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். எனவே விற்பனையாளர்கள் இருவரும் வசூல் தொகையுடன் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணத்துடன் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. எனவே இந்த கொள்ளை குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story