சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; அமைச்சர் பாஸ்கரன், நடிகர் சிங்கமுத்து பங்கேற்பு


சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; அமைச்சர் பாஸ்கரன், நடிகர் சிங்கமுத்து பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 7:40 PM GMT)

சிங்கம்புணரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், நடிகர் சிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூர் கழக செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் வாசு வரவேற்றார். இதில் சிறப்புரையாக அமைச்சர் பாஸ்கரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பாண்டியன், மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், தலைமைக்கழக பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து மற்றும் மேலூர் மலைச்சாமி ஆகியோர் பேசினர்.

அதில் அமைச்சர் பேசியதாவது:–அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டது முதல் இன்று வரை மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா கூறியபடி மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற சொல்லுக்கேற்ப இன்று வரை மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியாகத்தான் அ.தி.மு.க. உள்ளது.

மேலும், சிங்கம்புணரி பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் வரும் தண்ணீரை அதிகமான நாட்கள் கொண்டு வருவதற்கு நிரந்த தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் வாசு கொடுத்த மனுவின் அடிப்படையில் சிங்கம்புணரி பகுதிக்கு அரசு கல்லூரி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர் சிங்கமுத்து பேசியதாவது:– அ.தி.மு.க இரும்புக்கோட்டை, இரட்டை இலை மந்திர தகடு. இந்த இரண்டும் தமிழ்நாட்டை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக உதயமானது. சாதிகளை வைத்து அரசியல் நடத்தும் கட்சியல்ல அ.தி.மு.க. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பேரவைச்செயலாளர் திருவாசகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் சதீஷ்சீலன், ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆபத்தாரணப்பட்டி பிரபு, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பொன்னடப்பட்டி பொன்.மணி, பாஸ்கரன் மற்றும் ஒன்றிய சார்பு அமைப்பு செயலாளர்கள், பேரூர், வார்டு செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story