“நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்” ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி


“நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்” ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:35 PM GMT)

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை வண்டியூர் கண்மாய் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.“ என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. மேலும், நீர்நிலைகளில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டில் இருந்து விசாரித்தனர். விசாரணை முடிவில், “மதுரை பனையூர் கால்வாய், வண்டியூர் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்“ என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ளதால், ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல வைகையில் கழிவுநீர் கலப்பதை மாநகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை 2 வாரத்தில் இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story