அலங்காநல்லூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குத்திக் கொலை
அலங்காநல்லூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முன்விரோதத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்தவர் மதுரைவீரன்(வயது 45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி(32), சின்னச்சாமி(49) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மதுரைவீரன் வழக்கம்போல் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு ஜோதிமணி, சின்னச்சாமி உள்பட 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் மதுரைவீரனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி மதுரைவீரனை டீக்கடை அருகிலேயே சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மதுரைவீரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி, சின்னச்சாமி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்துபோன மதுரை வீரனுக்கு பந்தானசெல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.