பாளையங்கோட்டையில் ரெயில் மோதி ஆசிரியர் பலி நடைப்பயிற்சிக்கு சென்றபோது பரிதாபம்
பாளையங்கோட்டையில் நடைப்பயிற்சிக்கு சென்ற ஆசிரியர், ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் நடைப்பயிற்சிக்கு சென்ற ஆசிரியர், ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிக்கூட ஆசிரியர்நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் திருக்குறுங்குடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுபாஷினி (40). இவர், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வர்ஷினி (15) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். வர்ஷினி 10–ம் வகுப்பும், விக்னேஷ் 7–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
முருகன் தினமும் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெயில்வே பீடர் ரோடு வழியாக மகராஜநகர் வரை நடைப்பயிற்சிக்கு சென்றார். பின்னர் அவர் அன்புநகர்–மகராஜநகர் இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
ரெயில் மோதி சாவுஅப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரெயில் என்ஜின் டிரைவர் இதை கவனித்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 நிமிடம் தாமதம்இந்த விபத்தால் 30 நிமிடம் தாமதமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் வரும் வரை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரெயில் புறப்பட்டு சென்ற பிறகு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன் பின்னர் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
நடைப்பயிற்சிக்கு சென்ற ஆசிரியர் ரெயில் மோதி பலியான சம்பவம் நெல்லையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.