நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது


நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 4:27 PM GMT)

நாகர்கோவிலில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 288 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் குமரி மின் திட்டக்கிளை (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் நேற்று வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் இணைச்செயலாளர் இர்வின்தாஸ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட செயலாளர் செல்வதாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் குணசேகரன், பொருளாளர் ராஜகோபால், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஜாண் சவுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

பின்னர் மின்வாரிய அலுவலகம் முன்புறமுள்ள டிஸ்டில்லரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதில் மொத்தம் 288 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர். பிற்பகலில் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

Next Story