ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 6:50 PM GMT)

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 151 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 கூலி வழங்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மின் ஊழியர் மத்திய அமைப்பினர் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் துர்க்காலயா ரோடு வழியாக சென்று மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அமைத்து இருந்த தடுப்புகளையும் மீறி அலுவலக வளாகத்துக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திட்ட தலைவர் சகாயராஜ், கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணை தலைவர் பழனிவேல், அமைப்பின் துணை தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர் ராமசாமி, திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 151 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story