படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது


படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 3:45 AM IST (Updated: 14 Nov 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

படப்பை,

தாம்பரம் அடுத்த பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர், ஜல்லி, மணல் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார்.

விஜய் 4 நாட்களுக்கு முன்பு படப்பையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

உடனடியாக மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் எருமையூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைப் பகுதியில் கொலையாளிகள் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பழந்தண்டலத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் (24), அனகாபுத்தூரை சேர்ந்த அம்பேத் விமல்ராஜ் (25), திருமழிசையை சேர்ந்த ஆகாஷ் (25), பம்மலை சேர்ந்த சத்யா (23) ஆகியோர் என்பதும், 4 பேரும் கொலையாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது 4 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே விஜயை கொலை செய்தோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story