சமையல் செய்தபோது வலிப்பு: தீயில் கருகி இளம்பெண் பலி


சமையல் செய்தபோது வலிப்பு: தீயில் கருகி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்தபோது ஏற்பட்ட வலிப்பு காரணமாக, தீயில் கருகி இளம்பெண் பலியானார்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பழனி பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ரேமா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது மல்லிகா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

மல்லிகாவுக்கு வலிப்பு நோய் இருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் மல்லிகா தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அடுப்பில் இருந்து அவரது ஆடையில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென அவரது உடலில் பரவியது.

இதைத்தொடர்ந்து அவர் தீயில் உடல் கருகினார். மேலும் வீடும் தீப்பற்றி எரிந்தது, இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதையொட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மல்லிகா உடல் கருகி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் அவரது உடலை போலீசார் கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பிறகுதான் மல்லிகா கர்ப்பமாக இருந்தாரா? என்பது பற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மல்லிகாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ.(பொறுப்பு) சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story