பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூரில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்,

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளையை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், நேற்று கரூர்- கோவை சாலையிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு, ரூ.380 கூலி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த மின்ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை செயலாளர் தனபால், கிளை பொருளாளர் செல்வம் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் கரூர் கோவை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story