ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் 38 பேர் கைது


ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் 38 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 9:27 PM GMT)

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஊதிய மாற்றம் – வேலை பளு ஒப்பந்தப்படி மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மின்பகிர்மான வட்டக்கிளை சார்பில் ஈரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நேற்று காலை மின்சார வாரிய ஊழியர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஈ.வி.என்.ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு அமைப்பின் கிளை செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார். இதில் மின்சார வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story