திருப்பூர் மற்றும் உடுமலையில் சாலைமறியல் செய்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 209 பேர் கைது


திருப்பூர் மற்றும் உடுமலையில் சாலைமறியல் செய்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 209 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி திருப்பூர் மற்றும் உடுமலையில் சாலை மறியல் செய்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 209 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை,

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் அறிவித்தபடி ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருப்பூர் கிளை சார்பில் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக பி.என்.ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் உடுமலை கிளையின் சார்பில் நேற்று உடுமலை-திருப்பூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியல் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு உடுமலை கிளை திட்ட செயலாளர் எம்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உடுமலை கிளை செயலாளர் லிங்கவேல் வாழ்த்தி பேசினார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 157 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் மற்றும் உடுமலையில் கைது செய்யபட்ட 209 பேரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story