குப்பையை உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
குப்பையை உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகராட்சியின் 2–வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் 1–வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களே தரம் பிரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து அதை உரமாக மாற்றும் வகையிலும், மக்காத குப்பைகளை பிரித்து சிமெண்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 60 வார்டுகளிலும் அந்தந்த வார்டுகளில் உள்ள குப்பைகளை அதே வார்டில் தரம் பிரித்து உரமாக்கும் வகையில் குப்பை நுண் உரமாக்கும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் 2–வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையத்தை அடுத்த அண்ணாநகர், திருவள்ளுவர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் குருசாமி, முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நேற்று காலை 1–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் உதவி கமிஷனர் வாசுக்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் பகுதியில் குப்பை உரமாக்கும் மையம் அமைத்தால் குப்பைகளை ஏற்றி வரும் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் அண்ணாநகர் வழியாக வரும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குப்பையை உரமாகும் மையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர், குப்பையை உரமாக்கும் மையம் அமைப்பதன் மூலம் எந்த சுகாதார சீர்கேடும் ஏற்படாது என்றும், இந்த திட்டம் மற்ற மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு, அமலில் உள்ளது என்றும், எனவே பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.