முகநூல் மூலம் பழகி கள்ளக்காதல்: ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி சாவு
முகநூல் மூலம் பழகி கள்ளக்காதலர்களாக மாறிய ஒர்க்ஷாப் தொழிலாளி ரெயில்முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கையை சேர்ந்த பெண் காயம் அடைந்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வெங்கடேசாகாலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரும் இலங்கை கண்டியை சேர்ந்த ரவீந்திரராஜா என்பவரது மனைவி மனோரஞ்சிதம் (45) என்பவரும் முகநூல் (பேஸ்புக்) மூலம் நண்பர்களாக பழகினர். நாளடைவில் நட்பு, கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் சந்திக்க விரும்பினர். இதனை தொடர்ந்து மனோரஞ்சிதம் சுற்றுலா விசா எடுத்துக்கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி வந்தார்.
முகநூலில் பழகிய இருவரும் ஒருவரைஒருவர் நேரில் சந்தித்தபோது அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். இருவரும் மாறி, மாறி தங்களது காதலை வெளிப்படுத்தி முத்தமழை பொழிந்தனர். பின்னர் தர்மலிங்கம் பொள்ளாச்சி பி.கே.எஸ்.காலனியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மனோரஞ்சிதத்தை தங்க வைத்தார். இதனை தொடர்ந்து இருவரும் பொள்ளாச்சி, ஊட்டி, மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாசமாக பொழுதை போக்கினர்.
இந்த நிலையில் நேற்று விசா முடிந்ததால் மனோரஞ்சிதம் இலங்கைக்கு புறப்பட்டு செல்வதாக இருந்தது. இதற்கான விமான டிக்கெட்டையும் எடுத்து வைத்திருந்தார். ஆனால் இருவருக்கும் பிரிந்து செல்ல மனமில்லை. இருந்தாலும் பிரியவேண்டிய நிலை. இந்த நிலையில் இருவரும் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் வீதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அப்போது இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்தனர். இதில் தர்மலிங்கம் அதேஇடத்தில் உடல் துண்டாகி இறந்தார். மனோரஞ்சிதம் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோரஞ்சிதத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தர்மலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனோரஞ்சிதத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பழனி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.