மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களை மீட்கக்கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிலங்களை மீட்கக்கோரிய வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை மீனாட்சி–சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகியவற்றின் தர்ம காரியங்களுக்காக சூறாவளி சுப்பையர் கட்டளை சொத்துகள் தானமாக வழங்கப்பட்டன.
மதுரை மாட்டுதாவணி பஸ்நிலையம் எதிரே பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதி பெறப்படவில்லை.
இந்த சொத்துகளை மீட்க வேண்டும் வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோவில் சொத்துக்கள் விற்பனை செய்தது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இதில் கோவில் கட்டளை சொத்துகளை விற்றது உறுதி செய்யப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான அந்த சொத்துக்களை கலெக்டர் தலைமையிலான குழுவினர் மீட்டு, திரும்பவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதிநாதர் கோவில் நிலங்களையும் மீட்க வேண்டும் என்று தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், மதுரை, கரூர் மாவட்டங்களின் கலெக்டர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 29–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.