கூகூர்-கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் பொதுமக்கள் கோரிக்கை
கூகூர் - கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கூகூர்- கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு மண்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக மணல் லாரிகள் சென்று வந்தன. மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த மண் பாதையில் லால்குடி, அன்பில், வாளாடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, மால்வாய், பெருவளப்பூர், தச்சன்குறிச்சி உள்பட 77 ஊராட்சி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை திருச்சிக்கு கொண்டுவர பயன்படுத்தி வந்தனர்.
அதுமட்டுமின்றி இந்த மண்பாதை மூலம் லால்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் திருச்சியில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று படித்துவர பயனுள்ளதாக இருந்தது. மேலும் கிளிக்கூடு, கல்லணை, தோகூர், சுக்காம்பார், பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் லால்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யிலும் பயின்று வருகின்றனர். அவர்களுக்கும் இந்த மண்பாதை பயனுள்ளதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர் கிளிக்கூடு -கூகூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மண்பாதையை வாகனங்கள் செல்லாதவாறு சிதைத்துவிட்டனர். அதன்பின்னர் வெள்ளப்பெருக்கு நின்ற நிலையில் மண்பாதை சீரமைக்கப்படவில்லை.
இதனால் லால்குடியில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவெறும்பூர் சென்று வரவும், கிளிக்கூடு, கல்லணை, தோகூர், சுக்காம்பார் பகுதி மக்கள் லால்குடி வந்து செல்லவும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. எனவே கூகூர்- கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்றும், சிதைக்கப்பட்ட மண்பாதையை தற்காலிகமாக சீரமைத்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story