புஞ்சைபுளியம்பட்டியில் கழிவு பஞ்சு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
புஞ்சைபுளியம்பட்டியில் கழிவு பஞ்சு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
புஞ்சைபுளியம்பட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சபாபதி (வயது 65). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து அம்மன்நகரில் கழிவு பஞ்சுவை பிரித்து அதில் இருந்து நூல் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இதன் மேற்கூரை தகர ஷீட்டுகளால் ஆனது. இங்கு 20 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானோர் விடுமுறையில் சென்றுவிட்டார்கள். அதனால் நேற்று மாலை தொழிற்சாலையில் 4 பேர் மட்டும் பணியில் இருந்தனர். அவர்கள் பனியன் கழிவு துணிகளை எந்திரத்தில் போட்டு அரைத்து அதை பஞ்சாக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ அங்கிருந்த கழிவு பஞ்சுகளில் பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து வெளியே ஓடிவந்து புஞ்சைபுளியம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் கட்டிடமும் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து 2 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசம் ஆனது.