வளசரவாக்கத்தில் தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை தீ வைத்து எரித்த கணவர்


வளசரவாக்கத்தில் தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை தீ வைத்து எரித்த கணவர்
x
தினத்தந்தி 14 Nov 2018 9:30 PM GMT (Updated: 14 Nov 2018 8:51 PM GMT)

வளசரவாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை அவரது கணவர் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 35). இவரது மனைவி தாரணி (22). கணவன்–மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பாத்திர கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். சவுந்தரராஜன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தாரணி அலறும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது தாரணி உடலில் தீ எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் தாரணி மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் சவுந்தரராஜன் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அப்போதெல்லாம் தாரணி உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டபோதும் தாரணி வழக்கம்போல் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சவுந்தரராஜன் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக நாடகம் ஆடுகிறாயா? எனக்கூறி தீக்குச்சியை பற்றவைத்து அவர் மீது போட்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே சவுந்தரராஜன் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.

இந்த தகவல்கள் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சவுந்தரராஜனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தாரணியிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.


Next Story