கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம்


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 8:34 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்கப்பட்டது.

நாகர்கோவில்,

சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் நேரத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

எனவே இதை கருத்தில் கொண்டு அந்த ரெயில் பெட்டிகளை பகலிலும் பயன்படுத்தும் விதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 15–ந் தேதி முதல் (அதாவது நேற்று) நாகர்கோவில்–கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

அதன்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்கப்பட்டது. அதாவது இந்த ரெயில் தினமும் காலை 6.10 மணிக்கு கன்னியாகுமரிக்கு வரும்.

இதே போல நேற்றும் இந்த ரெயில் காலை 6.10 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தது. பின்னர் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு 7.15 மணிக்கு மீண்டும் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து பெட்டிகள் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு காலை 7.55 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கொச்சுவேளிக்கு புறப்பட்டது.

மறுமார்க்கமாக இந்த ரெயில் கொச்சுவேளியில் இருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு பகல் 1.55 மணிக்கு நாகர்கோவில் வந்தது. அதன் பிறகு வழக்கம் போல மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்கியதற்கு குமரி மாவட்ட ரெயில் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story