நீலகிரியில் தடை விதித்தும் பயனில்லை பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் சோதனையை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


நீலகிரியில் தடை விதித்தும் பயனில்லை பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் சோதனையை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 15 Nov 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களுடன் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தடை விதித்தும் பயனில்லாத நிலை உள்ளதால் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக உள்ளது. அழகான மலைமுகடுகளும், பசுமை போர்த்திய புல்வெளிகளும், வனங்கள், வனவிலங்குகளை கொண்டு திகழ்கின்றன. இதனை ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக இருவழிச்சாலை வழியாகவும், கேரளா- கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கும் வந்து செல்லலாம்.

இயற்கை அழகை காண சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் மண்ணின் வளத்தை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வந்து நீலகிரியில் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவற்றை வனப்பகுதியில் வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். சீசன் காலங்களில் இயற்கை பிரதேச பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இதனால் மண்ணின் வளம் கெடுவதுடன் வன உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்களை தின்று உயிரிழக்கும் நிலையும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

இதை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், புழக்கத்தில் விடவும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தடையை மீறும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வரப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பொது இடங்களில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவது நீலகிரியில் தடை செய்யப்பட்டு உள்ளது என எச்சரிக்கை விழிப்புணர்வு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட் களை கொண்டு வந்து பயன்படுத்தி விட்டு வனத்தில் வீசி செல்கின்றனர். இதனை தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் தன்னார்வ அமைப்பை சேர்ந்த பெண்கள் நியமிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. அப்போது வாகனங்களில் மறைத்து வைத்துள்ள பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தாலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு சரிவர ஏற்பட வில்லை என தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளை கடக்கும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து தினமும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகிறது. மண்ணை கெடுக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என சுற்றுலா பயணிகள் உள்பட நாம் அனைவரும் நினைத்தால் மட்டுமே மாற்றம் வரும். மேலும், சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story