கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் கிராம மக்கள் பீதி
கூடலூர் அருகே தினமும் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் முழு பலன் கிடைப்பது இல்லை. பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டி விட்டு சென்ற சில மணிநேரத்தில் மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. இதனால் யானைகள் வருகையை கட்டுப்படுத்த முடிய வில்லை.
கூடலூர் தாலுகா புளியாம்பாரா பகுதியில் பல குக்கிராமங்கள் உள்ளன. வனத்தில் இருந்து காட்டு யானைகள் அதிகளவு வெளியேறி தேவாலா, நாடுகாணி, பாண்டியாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
இந்த நிலையில் புளியாம்பாரா கத்தரித்தோடு பகுதியில் கடந்த 10 நாட்களாக ஒரு காட்டு யானை இரவில் ஊருக்குள் வருகிறது. பின்னர் இரவு முழுவதும் வீடுகளை முற்றுகையிட்டும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
தினமும் மாலை 6 மணிக்கு மேல் காட்டு யானை வனத்தில் இருந்து கிராமத்துக்குள் நுழைந்து விடுகிறது. இதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரை காட்டு யானை சில நாட்களுக்கு முன்பு துரத்தியது. இதை கண்ட அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டு விரட்டியதால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. ஆனால் 1 மணி நேரத்தில் மீண்டும் அதே பகுதிக்கு யானை வந்து விட்டது.
மாணவ- மாணவிகள் நிம்மதியாக பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீடு திரும்ப முடிய வில்லை. அத்தியாவசிய தேவைகள் மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்காக கூடலூருக்கு செல்லும் மக்கள் மாலை நேரத்துக்குள் வீட்டுக்கு வர வேண்டிய நிலை காணப்படுகிறது.
இன்னும் கூற வேண்டுமானால் தீபாவளி பண்டிகை நாளில் கூட சந்தோஷமாக இல்லை. எந்த நேரத்தில் காட்டு யானை யாரை தாக்குமோ என்ற பீதியில் வாழும் நிலை உள்ளது. வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து யானையை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story