நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது


நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 6:38 PM GMT)

நெல்லை கோவிலில் ரூ.24 கோடி மதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார். கைதான அவரை கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.

கும்பகோணம்,

நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு ரூ.24 கோடி மதிப்புள்ள 13 உலோக சிலைகள் கடத்தப்பட்டன.

இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் வேகமெடுத்த இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த ஷாஜகான், அருணாசலம் ஆகிய 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து நாறும்பூநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட சுப்பிரமணியர், சிவகாமி அம்மன், வெயில் காத்த அம்மன், கிருஷ்ணர், அஸ்திர தேவர் ஆகிய 5 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சவுதிமுருகன், பாலாஜி, மோகன், தினகர் ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மேலும் 4 சிலைகள் கைப்பறப்பட்டன.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2005-ம் ஆண்டு கோவிலில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை பங்கு போடும்போது ஏற்பட்ட தகராறில் நகை கடை உரிமையாளர் சக்திமோகன் என்பவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீவானந்தம் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நடத்திய விசாரணையில் ஜீவானந்தத்துக்கும், சிலை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீவானந்தத்தை நேற்று சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடுவர் அய்யப்பன்பிள்ளை முன்பு ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்டுள்ள ஜீவானந்தம், திருச்சி மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் கலால் பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story