நெல்லை கோர்ட்டு முன்பு பரபரப்பு: பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது கார் பறிமுதல்
நெல்லை கோர்ட்டு முன்பு பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்தவர் மணி என்ற எஸ்டேட் மணி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மணி மீதான வழக்கு விசாரணை நெல்லை கோர்ட்டுக்கு நேற்று வந்தது. அவர் ஆஜராவதற்காக கோர்ட்டுக்கு வந்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிங்காரம் என்பவரை கடந்த ஆண்டு வழக்கு விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து தூத்துக்குடி கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் சிங்காரத்தை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கும் நேற்று நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதேபோல் பல்வேறு முக்கிய வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. இதனால் கோர்ட்டு பரபரப்பாக காணப்பட்டது.
அதே நேரத்தில் நெல்லை கோர்ட்டு முன்பு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. வெகுநேரம் அந்த கார் நின்று கொண்டு இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சந்தேகம் அடைந்தனர். அந்த காரில் யாரேனும் இருக்கிறார்களா? என்பதை பார்க்க போலீசார் காரை நோக்கி சென்றனர். அப்போது காரில் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது.
அந்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்றனர். அதில் 3 பேரை மடக்கிப்பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த கும்பல் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. காரையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், நெல்லையை அடுத்த சேந்திமங்கலத்தை சேர்ந்த பெருமாள் மகராஜன் (வயது 26), சுரண்டையை சேர்ந்த சிவா என்ற சிவனுபாண்டி (27), மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த வாரம் பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் 2 மினி பஸ்கள் மோதி கொண்டன. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் பஸ் சேதமடைந்ததற்கான பணத்தை கேட்டனர். அந்த தரப்பினர் நெல்லை கோர்ட்டுக்கு முன்பு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பணம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அந்த தரப்பினர் வருகைக்காக தற்போது பிடிபட்ட கும்பல் காத்து இருந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அந்த மினி பஸ் டிரைவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சிங்காரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நெல்லை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது கொலை செய்ய இந்த கும்பல் பதுங்கி இருந்ததா? எனவும், மணிக்கு பாதுகாப்பாக அந்த கும்பல் வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story