18 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு “மகளை மனுதாரராக சேர்க்க தேவையில்லை”


18 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு “மகளை மனுதாரராக சேர்க்க தேவையில்லை”
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

18 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அவருடைய மகளை மனுதாரராக சேர்க்க தேவையில்லை என தெரிவித்தது.


மதுரை,

குமரி மாவட்டம், பொன்மனையைச் சேர்ந்த வனஜா, மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகள் ஷோபாவுக்கும், ரமேஷ்பாபு என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்பு கருவுற்ற எனது மகளை 2000-ம் ஆண்டு பிரசவத்துக்காக குலசேகரம் அருகே படநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்க மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் பிரசவத்தின்போது ஜன்னி ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. சிறிதுநேரம் கழித்து அவரை பார்த்தபோது, சுயநினைவின்றி (கோமா) இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் அவரை கோமாவில் இருந்து மீட்க முடியவில்லை.

தற்போது 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ளார். அவரை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறோம். இதற்கிடையே அவரது கணவர் ரமேஷ்பாபு வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். எனது மகளை பராமரிக்கவும், எனது பேத்தியை வளர்க்கவும் சிரமப்படுகிறேன். அவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 18 வருடங்களாக செலவு செய்த தொகையை காப்பீடாக வழங்கவும், மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல ஷோபாவின் கணவர் ரமேஷ்பாபு சார்பிலும் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஷோபாவின் மகள் ஆதர்ஷாவை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று அவர் சார்பில் வக்கீல் மோகன்தாஸ் நேற்று நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார். இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இதற்கிடையே ரமேஷ்பாபுவின் வக்கீல் ஆஜராகி, இழப்பீட்டு தொகையை ஷோபாவுக்கும், அவரது மகளுக்கும் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.

பின்னர் நீதிபதி ராஜசேகரன், “வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதர்ஷாவை மனுதாரராக சேர்த்தால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்லும் என்பதால் அது தேவையில்லை. கோமா நிலையில் உள்ள ஷோபாவின் தற்போதைய நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பாக டாக்டரின் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்“ என்றார். பின்னர் இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று ஷோபாவின் மகள் ஆதர்ஷா ஆஜராக கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

Next Story