சுசி ஈமு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் போலீசார் வேண்டுகோள்


சுசி ஈமு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் போலீசார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Nov 2018 3:45 AM IST (Updated: 16 Nov 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சுசி ஈமு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஈரோடு,

பெருந்துறையில் சுசி ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்தனர். அதன்பின்னர் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் பலர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், அவர்கள் மீது கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

30-ந் தேதிக்குள்...

சுசி ஈமு நிறுவனத்தின் மோசடி குறித்து கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 304 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. அவர்களிடம் ரூ.94 கோடியே 85 லட்சத்து 70 ஆயிரத்து 254 மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவின்படி சுசி ஈமு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்கள், அலுவலக தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் மீதான புகார்கள் கடந்த 2016-ம் ஆண்டு வரை பெறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதுவரை புகார் அளிக்காமல் இருந்துவரும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து புகார்களை பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story