காவிரி தாய்க்கு 360 அடி உயரத்தில் சிலை : கர்நாடக அரசு திட்டம்


காவிரி தாய்க்கு 360 அடி உயரத்தில் சிலை  : கர்நாடக அரசு திட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 5:18 AM IST (Updated: 16 Nov 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1,200 கோடியில், கே.ஆர்.எஸ். அணை பூங்காவில் காவிரி தாய்க்கு 360 அடி உயரத்தில் சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் ‘டிஸ்னிலேண்ட்’ பூங்காவை போல் கே.ஆர்.எஸ். அணை பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ெஜட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,200 கோடியில் இந்த திட்டம் அமல் படுத்தப்படும். கே.ஆர்.எஸ். அணை பகுதியில் 300 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு, அதில் அருங்காட்சியக கட்டிடம் கட்டப்படும். அதன் மீது காவிரி தாய்க்கு உயரமான சிலை அமைக்கப்படும். அங்கு ‘ஈபிள்’ டவரை போல் ஒரு பெரிய டவரும் நிறுவப்படும். அந்த டவரில் ஏறிச்சென்று, கே.ஆர்.எஸ். அணையை பார்க்க வசதி செய்து கொடுக்கப்படும்.

அரசு-தனியார் பங்களிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அங்கு ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது. இந்த தி்ட்டத்திற்கு சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த திட்டம் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை அரசு வழங்குகிறது. தனியார் நிறுவனமும் இதில் முதலீடு செய்யும். இந்த திட்டத்திற்கு மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்படும்.

ஜனார்த்தனரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவர் பெரிய ஆள். அதிக சக்தி கொண்டவர். நவம்பர் 6-ந் தேதி என்னை சிறைக்கு அனுப்புவதாக ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார். அந்த தேதி முடிந்துவிட்டது. அடுத்த தேதியை அவர் எப்போது நிர்ணயம் செய்வார் என்று தெரியவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப் படுத்தும் விதத்தில் கே.ஆர்.எஸ். அணையில் அருங்காட்சியக கட்டிடம் கட்டப்படுகிறது. அதன் மீது காவிரி தாய் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலையின் உயரம் 125 அடியாக நிர்ணயிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அருங்காட்சியக கட்டிடத்தின் உயரத்தையும் சேர்த்தால் காவிரி தாயின் சிலை 360 அடி உயரமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story