தமிழகத்தில் ஜனநாயக முறையில் “இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும்” கனிமொழி எம்.பி. பேட்டி
“தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி,
மகளிர் அணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அடிப்படை வசதிகளை கூட பெற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதை தாண்டி டெங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த மழைக்கு பிறகு வரக்கூடிய சுகாதார சீர்கேடுகள், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்ய அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் நான் தத்தெடுத்த கிராமத்தில் மக்கள் கேட்ட உதவிகள் அனைத்தும் எனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து செய்யப்பட்டு உள்ளது.
சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தர்மபுரியில் நடந்த சம்பவத்தைகூட காவல்துறையே அதை மூடி மறைக்க காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகும் சூழல் இருந்தால், யாருக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும்?.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் வந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சி எப்போது போகும் என்றுதான் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story