பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் விபத்து; 7 பேர் கைது


பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் விபத்து; 7 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர் பொன்ராஜ் பாண்டியன் (வயது 35). இவர் கடந்த 11-ந் தேதி இரவு தனது தாய் ஆனந்தி (69), மகள் திவ்யுதா (8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கிண்டியில் இருந்து பம்மல் நோக்கி சென்றார். பரங்கிமலை பகுதியில் சென்றபோது 10 மோட்டார் சைக்கிள்களில் சில வாலிபர்கள் வேகமாக வந்தனர்.

இதில் ஒரு மோட்டார் சைக்கிள் பொன்ராஜ் பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்ராஜ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். இதில் ஆனந்தி பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, பொன்ராஜ் பாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியவர்கள், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு இருந்ததும், இதில் வேகமாக சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

எனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்வதற்காக சென்னை மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் போக்குவரத்து உதவி கமிஷனர் யுவராஜ், இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், அழகு ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் சோழவரத்தை சேர்ந்த அருண் (20) என்பவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அரி (24), சூளைபள்ளத்தை சேர்ந்த மோசஸ் (20), வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (22), நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (25), சோழவரத்தை சேர்ந்த தினேஷ் (19), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் அருண் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சாலை விபத்து, திருட்டு, கூட்டு கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் வார விடுமுறை நாட்களில் இதைப்போல தனது நண்பர்களுடன் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
1 More update

Next Story