காங்கேயத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


காங்கேயத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 17 Nov 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் வட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான, அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கோபால் நேரில் ஆய்வு செய்தார்.

இதில் நத்தக்காடையூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் திருந்திய நெல் சாகுபடி, நத்தக்காடையூர் கோமாரி நோயால் தாக்கப்பட்டு கால்நடைபராமரிப்புத் துறையின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்ட மாட்டினங்களையும், சிவன்மலை ஊராட்சி சிவன்மலையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.87,500 மானிய உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த வெங்காய சேமிப்பு கிடங்கு, காங்கேயம் சென்னிமலை சாலையில், நகராட்சி சார்பில் ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டிருந்த குப்பைகளை பிரித்தெடுக்கக்கூடிய நவீன உரக்கிடங்கினையும் ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் தினமும் சேகரமாகும் குப்பைகள் அதன் மூலம் தயாராகும் உரம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் தேவிகா, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், பாலமுருகன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கோபால் நிருபர்களிடம் கூறுகையில், கஜா புயல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான முன்னேற்பாடுகள் திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. காவிரி 2–வது கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது திட்டத்தின் நிலை குறித்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தவறுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில் சரிசெய்யப்படும் என்றார்.


Next Story