8 மணிநேரத்துக்கு மேலாக வீசிய புயல் காற்று: 3 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - பொதுமக்கள் கடும் அவதி


8 மணிநேரத்துக்கு மேலாக வீசிய புயல் காற்று: 3 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 10:20 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 8 மணி நேரத்துக்கும் மேலாக புயல் காற்று வீசியது. இதனால் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது. அப்போது திருவாரூர் மாவட்டத்தில் புயல் காற்று வீச தொடங்கியது. படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்ததால் பொதுமக்கள் விடிய,விடிய பீதியில் உறைய நேரிட்டது.

பலத்த காற்று காரணமாக திருவாரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அதேபோல வீடுகளின் கூரைகளும் பறந்தன. காற்றின் பேரிரைச்சல், திருவாரூர் மாவட்ட மக்களை இரவு முழுவதும் விழித்திருக்க செய்து விட்டது. நள்ளிரவு தொடங்கிய புயல் காற்று காலை 8 மணியை தாண்டிய பின்னரும் வீசியது.

புயல் காற்று வீச தொடங்குவதற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்டத்தில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை வரை மின் வினியோகம் சீராகவில்லை. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நீடாமங்கலம் பகுதியில் நேற்று காலை பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. நீடாமங்கலம் காஞ்ஜான் திடல் பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 300 மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. 2 ஆயிரம் மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பத்தூர், அரசமங்கலம், விஸ்வநாதபுரம், செட்டி சிமிலி, திருமதிகுன்னம், பெருமாளகரம் ஆகிய 6 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரடாச்சேரி, முசிறியம் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையிலான தி.மு.க.வினர் மேற்கொண்டனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, பழையனூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் புயலில் சிக்கி சாய்ந்தன. வடபாதிமங்கலம்-திருவாரூர், வடபாதிமங்கலம்-மன்னார்குடி பிரதான சாலைகளில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

கூத்தாநல்லூர் பகுதியில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், தாசில்தார் செல்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து இருந்தனர். கூத்தாநல்லூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்தது.

மன்னார்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த மின் கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் செய்வதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story