அனைத்து கூட்டுறவு சங்கங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


அனைத்து கூட்டுறவு சங்கங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 10:45 PM GMT)

மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கையில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 65–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. ஆவின் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ஆரோக்கியசுகுமார் வரவேற்று பேசினார். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி திட்ட விளக்கவுரை வாசித்தார்.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:– மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகை கடன்ரூ.15 கோடியே 76 லட்சத்திற்கு வழங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரை ஒரு சில சங்கங்கள் தான் நன்கு செயல்படும் நிலையில் உள்ளன. பல சங்கங்கள் எந்த செயல்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரவு செலவு இல்லாமல் சங்கங்கள் இருப்பதால் எந்த பயனும் கிடையாது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை எங்களுக்கு தெரிவிக்கலாம். நாங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி அவைகளை செயல்பட நடவடிக்கை எடுக்கிறோம். பொதுவாக சுய உதவி குழுக்கள் தான் கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் தான் சரியாக திருப்பியும் கட்டுகின்றனர். எனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மக்களுடன் பின்னி பிணைந்து உள்ளன. எனவே அதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களை நன்கு இயக்கி செல்ல வேண்டும். தற்போது மாவட்டத்திற்கு வைகையில் தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்தடன் மழையும் பெய்தால் தான் கடை மடை வரை தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் 5–வது முறையாக சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்ட மின் பணியாளர் கூட்டுறவு சங்கம் உள்பட 21 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயத்தை அமைச்சர் வழங்கினார். மேலும் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன் பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கருணாநிதி, கோபி, என்.எம்.ராஜா, மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகங்கை சரக துனை பதிவாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story