சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 10:45 PM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய சகோதரர் பன்னீர்செல்வம் சேலம் 4 ரோடு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக பிரபாகரன் மற்றும் அவரது தாய் சாரதா, உறவினர் ஜானகிராமன் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் பன்னீர்செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்தனர். இதையடுத்து பிரபாகரன், சாரதா ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story