குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:40 PM GMT)

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்புரெட்டிப்பட்டி காலனியில் 100 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதிக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.

இந்தநிலையில் தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டுமெனக்கூறி பெண்கள் நேற்று காலை குப்புரெட்டிப்பட்டி பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார், மருதூர் பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தினாலேயே குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story