காட்டு யானைகளை கண்காணிக்க ரூ.15 லட்சத்துக்கு வாங்கிய ஆளில்லா குட்டி விமானம், அதிநவீன கேமராவை பயன்படுத்துவது இல்லை - வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


காட்டு யானைகளை கண்காணிக்க ரூ.15 லட்சத்துக்கு வாங்கிய ஆளில்லா குட்டி விமானம், அதிநவீன கேமராவை பயன்படுத்துவது இல்லை - வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 18 Nov 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகளை கண்காணிக்க வாங்கிய ஆளில்லா குட்டி விமானம், அதிநவீன கேமராவை பயன்படுத்துவது இல்லை என வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கோவை,

கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அத்துடன் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை வனக்கோட்ட வனப்பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) உள்ளது.

இதன் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகள் மலையடிவார பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டாலும் ஆழம் குறைவான பகுதி வழியாக வெளியே வந்துவிடுகின்றன.

இதை வனத்துறையினர் கண்காணித்து அவற்றை வனப்பகுதிக்குள் துரத்தி வருகிறார்கள். மேலும் வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் எந்த பகுதியில் இருக்கிறது? அது வெளியே வருகிறதா? அல்லது வனப்பகுதிக்குள் செல்கிறதா? என்பதை கண்டறிய 2 ஆளில்லா குட்டி விமானங்களும், ஒரு அதிநவீன கேமராவும் வாங்கப்பட்டது.

ஆனால் இவற்றை தற்போது வனத்துறையினர் பயன்படுத்துவது கிடையாது என்றும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்த ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்றும் வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:–

கோவை வனக்கோட்ட பகுதி காட்டு யானைகள் அதிகம் கொண்டது ஆகும். இங்கு தினமும் காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து கொண்டே இருக்கிறது. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்ததும், அவற்றை துரத்தும்போது வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. அதன் பின்னர் வனத்துறையினரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள்.

ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அட்டகாசம் செய்கிறது. எனவே காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிய ரூ.3 லட்சத்தில் 3 கிலோ எடை கொண்ட ஆளில்லா குட்டி விமானமும், ரூ.7 லட்சத்தில் 5 கிலோ எடை கொண்ட ஆளில்லா குட்டி விமானமும், ரூ.3 லட்சத்துக்கு அதிநவீன கேமராவும் வாங்கப்பட்டது.

இதில், அதிநவீன கேமரா மூலம் இரவு நேரத்திலும் 1 கி.மீ. தூரம் வரை கண்காணிக்கலாம். இரவு நேரத்தில் ரோந்து செல்லும் வனத்துறையினர் தங்கள் கையில் கேமராவை வைத்துக்கொண்டு அதை செல்போனில் இணைத்தபடி பார்த்துக்கொண்டே செல்லலாம். இரவு நேரத்திலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த வனவிலங்குகள் எங்கு இருக்கிறது என்பதை தெளிவாக கண்காணிக்க முடிந்தது.

அதுபோன்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் 2 ஆளில்லா குட்டி விமானம் கோவை வந்தது. இந்த விமானம் அரை மணி நேரம் 100 மீட்டர் உயரத்தில் பறந்தபடி கண்காணிக்கும் என்றும், அதில் தேனீக்கள் போன்ற சத்தமும், பட்டாசு வெடிப்பதுபோன்ற சத்தமும் எழுப்பும் என்று கூறப்பட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதத்தில் அவற்றை தடாகம் வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்துச் சென்று சோதனை செய்தனர். ஆனால் அதில் உள்ள பேட்டரி சரியாக சார்ஜ் நிற்பது இல்லை என்பதால் 10 நிமிடம் மட்டுமே பறக்கிறது. அதுபோன்று எதிர்பார்த்தபடி சத்தமும் எழுப்புவது இல்லை.

அதுபோன்று அவற்றை முறையாக இயக்க ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக அவை எவ்வித பயன்பாடும் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. அவற்றை பயன்படுத்த வனத்துறை உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

தற்போது தடாகம், கணுவாய், பன்னிமடை, ஆனைக்கட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் சின்னதம்பி, விநாயகன் என்ற 2 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதுதவிர மற்ற காட்டு யானைகளும் அங்கு முகாமிட்டு வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.

இந்த யானைகளை துரத்துவதற்காக முதுமலையில் இருந்து விஜய், மொம்மன் என்ற கும்கி யானை களும், சாடிவயல் முகாமில் இருந்து சேரன், ஜான் என்ற கும்கி யானைகளும் வந்துள்ளன. இந்த 4 கும்கி யானைகளும் ஒரு இடத்தில் ரோந்து சென்றால் காட்டு யானைகள் வேறு பகுதி வழியாக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொடர்ந்து அட்டகாசம் செய்கிறது.

காட்டு யானைகளை கண்காணிக்க வாங்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள், பயன்பாட்டில் இருந்தால் எளிதாக காட்டு யானைகளை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் துரத்தி இருக்கலாம். ஆனால் அதை பயன்படுத்த ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்காததால் பயன்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக தடாகம், கணுவாய் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. எனவே இனியாவது வனத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story