அம்மன் கோவிலில் நகை திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை


அம்மன் கோவிலில் நகை திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2018 3:45 AM IST (Updated: 18 Nov 2018 8:35 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் நகை திருடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை, பற்றக்கோடு பகுதியில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு, கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கதவு  உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், அம்மன் சிலையில் அணிந்திருந்த 4 கிராம் தங்க சங்கிலியை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் துணியால் மூடியபடி கோவிலுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Next Story