தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 4:04 PM GMT)

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட பசுமை தாயகம் சார்பில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் நினைவுநாள் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி 4 ரோட்டில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் மாது தலைமை தாங்கினார். பசுமை தாயக மாவட்ட செயலாளர்கள் ராஜா, வடிவேல், மாவட்ட தலைவர்கள் வீரமணி, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை அவர் பொதுமக்களிடம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

உலகிலேயே மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் நாடு இந்தியாவாகும். 2017–ம் ஆண்டில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 910 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 913 பேர் சாலை விபத்தால் இறந்துள்ளனர். இந்தியாவில் மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் முதல் மாநிலம் தமிழகம். இங்கு 2017–ம் ஆண்டில் மட்டும் 65 ஆயிரத்து 562 விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 16 ஆயிரத்து 157 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் முதல் மாநகரம் சென்னையாகும். இங்கு 2017–ம் ஆண்டில் 7 ஆயிரத்து 257 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,264 பேர் இறந்துள்ளனர். கடந்த 2017–ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 74 ஆயிரத்து 572 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.131 கோடி ஆகும். அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடியாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகும்.

சாலை விபத்துகளில் உயிரிழப்போரும், படுகாயம் அடைவோரும் பெரும்பாலும் சம்பாதிக்கும் வயதினர். சாலை விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலை கருப்பு பகுதிகளை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி.க்கள் தன்ராஜ், பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story