தடாகம், கணுவாய் பகுதியில் அட்டகாசம் அதிகரிப்பு: கும்கிகள் வந்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்


தடாகம், கணுவாய் பகுதியில் அட்டகாசம் அதிகரிப்பு: கும்கிகள் வந்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 7:08 PM GMT)

கும்கிகள் வந்தும், தடாகம், கணுவாய் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை சமாளிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கோவை,

கோவை வனச்சரகம் கணுவாய், தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி ஆகிய பகுதிகள் மருதமலையின் பின்பகுதியிலும், பன்னிமடை, வரப்பாளையம் பகுதிகளில் பொன்னூத்துமலையும் உள்ளது. இந்த 2 மலைகளுக்கும் இடையே சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் மருதமலை யின் பின்பகுதியில் இருந்து பொன்னூத்துமலைக்கு செல்லும்.

அப்போது கணுவாய், சின்னத்தடாகம், சோமையனூர், பன்னிமடை மற்றும் அதைச்சுற்றி கிராமங்க ளுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 5 மாதமாக 2 காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. அவற்றுக்கு பொதுமக்கள் சின்னதம்பி, விநாயகன் என்று பெயர் சூட்டி உள்ளனர். முதலில் பொதுமக்களை துரத்தாமல் இருந்து வந்த இந்த 2 யானைகளும், கடந்த சில நாட்களாக பொதுமக்களை துரத்துகின்றன. அவற்றை இளைஞர்கள் சீண்டியதால்தான் அந்த யானைகள் அட்டகாசம் செய்வதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், அந்த 2 காட்டு யானைகளையும் அங்கிருந்து துரத்துவதற்காக முதுமலை முகாமில் இருந்து பொம்மன், விஜய் ஆகிய 2 கும்கிகளும், சாடிவயல் முகாமில் இருந்து சேரன், ஜான் என்ற 2 கும்கிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிமடை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது அந்த கும்கி யானைகள் பொன்னூத்துமலை அருகே வரப்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆனாலும் அந்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் குறையவில்லை. கும்கி யானைகள் ஒரு பகுதியில் இருந்தால், மற்றொரு பகுதி வழியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:–

பொதுவாக கும்கி யானைகள் என்றால் நீண்ட தந்தங்களுடனும், அவற்றின் செயல்பாடுகள் அதிவேகத்துடனும் இருக்கும். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும்போது அங்கு கும்கி யானைகளை கட்டி வைத்து இருந்தால், அவை நிற்பது 3 கி.மீ. தூரம் வரை மற்ற காட்டு யானைகளுக்கு தெரிந்து விடும். அத்துடன் வனத்துறையினர் அடிக்கடி அந்த கும்கி யானைகளுடன் வனப்பகுதிக்குள் ரோந்து அழைத்து செல்வார்கள். இதனால் கும்கி யானைகளுக்கு பயந்து காட்டு யானைகள் வேறு பகுதிக்கு சென்று விடும்.

ஆனால் தடாகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களாக 4 கும்கி யானை களையும் வனத்துறையினர் ஒரே இடத்தில் தான் கட்டி வைத்து உள்ளனர். அவற்றை வனப்பகுதிக்கு அழைத்து ரோந்தும் செல்வது கிடையாது. அத்துடன் கும்கிகளை ஒரே இடத்தில் கட்டி வைத்து இருப்பதால்தான் காட்டு யானைகள் மற்ற பகுதிக்கு வந்து அட்டகாசம் செய்கிறது. இதன் காரணமாக கும்கிகள் வந்தும் பயனில்லாத நிலையே நீடிக்கிறது..

கடந்த ஒரு வாரம் வரை சின்னதம்பி, விநாயகன் ஆகிய 2 காட்டு யானைகள்தான் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தன. ஆனால் தற்போது வேறு காட்டு யானைகளின் நடமாட்டமும் அங்கு இருக்கிறது. சோமையனூரில் ஒரு தொழிலாளியையும் காட்டு யானை கொன்றது. இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வனத்துறையினரின் அலட்சியம் தான் காரணம். சரியாக திட்டமிட்டு செயல்படாததால் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

காட்டு யானைகளை துரத்துகிறோம் என்ற பெயரில், 4 கும்கிகளை அங்கு பெயரளவுக்கு மட்டும் நிறுத்தி வைத்து வேடிக்கை காட்டுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத்துறையினரை கண்டித்து மலையோர கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story