கடலோர மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த இடங்களை நாளை பார்வையிட்டு ஆய்வு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கடலோர மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை(20-ந்தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன் என்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. அங்கே நிவாரண பணிகள் எல்லாம் முடுக்கிவிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து சேதம் அடைந்த பகுதிகளை பார்த்து நிவாரண பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அமைச்சர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உதவி புரிந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய பயணம் எப்போது?
பதில்:- இன்றைய தினம்(நேற்று) நான் செல்லலாம் என்று இருந்தேன். இன்றைய நிகழ்ச்சி கிட்டத்தட்ட மாலை வரை நீடித்திருக்கும் என்ற காரணத்தினால் இங்கிருந்து 350 கிலோ மீட்டர் தூரம் நாகப்பட்டினம் உள்ளது. அதுமட்டுமல்ல, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் புயலால் சேதம் அடைந்திருக்கிறது. அதையெல்லாம் பார்வையிட ஒரு நாள் முழுவதும் வேண்டும். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 20-ந் தேதி (நாளை) காலையில் கடலோர மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன்.
கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினர் தமிழ்நாடு அரசிற்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மீட்பு பணிகளில் அவர்களுடைய ஒத்துழைப்பு ஏதாவது கேட்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- இவ்வளவு பெரிய சோதனையை இயற்கை நமக்கு தந்துவிட்டது. இதை மனிதாபிமான முறையிலேயே அனைவரும் அணுகவேண்டும். இதில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடே இருக்க கூடாது. அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களே இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் மனிதாபிமான செயல். பொதுமக்கள் ஒவ்வொருவரும் நம்முடைய மக்கள் பாதிக்கப்படுகின்றபோது, நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி மனநிலை ஏற்படுமோ? அதைப்போல் கருதி அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும்.
கேள்வி:- குடிநீர் கிடைக்கவில்லை என்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்களே?
பதில்:- அப்போது முகாமில் குறைந்த அளவுதான் தங்கியிருந்தார்கள். முகாம்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. கிராம பகுதிகளில் நிறைய மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை ஒரு நாளில் சரி செய்வது கடினம். ஒரு மின்கம்பம் நிறுவ எவ்வளவு நேரம் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும். வயல்வெளிகளில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை, கிட்டத்தட்ட 1,000 அடி சென்றுதான் அவற்றை நிறுவ வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
மின்கம்பங்கள் முழுவதும் நடப்பட்டு, கம்பிகள் இழுக்கப்பட்ட பிறகு தான் மின்சாரம் கொடுக்க முடியும் என்ற சூழ்நிலையில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மக்கள் இன்றைக்கு அதிகளவில் முகாம்களில் வந்து தங்கியிருப்பதால் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், குடிநீரை பொறுத்தவரை, ஆங்காங்கே ஜெனரேட்டர் வைத்து பம்ப்செட்டை இயக்கி வழங்கி கொண்டிருக்கின்றோம்.
சாலைகளில் பார்க்கும்பொழுது, குறைவாக இருப்பதுபோல் தெரிந்தது, கிராமப்புறங்களில் சென்று பார்க்கும்பொழுது அதிகமான மரங்கள் ஒடிந்து, சாய்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட பல லட்சம் மரங்கள் ஒடிந்து சேதமடைந்துள்ளது. விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளது. இவற்றையெல்லாம் கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Related Tags :
Next Story