புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு: போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பல லட்சம் மோசடி, 2 பேர் கைது
புதுச்சேரியில் மீண்டும் போலி ஏ.டி.எம். கார்டு மூலமாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் சின்ன கரையாம்புத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 42). இவர் காரையாம்புத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக உள்ளார்.
இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சத்து 35 ஆயிரம் பணம் திடீரென்று மாயமானது. இதுகுறித்து புதுச்சேரி போலீசில் சாமுண்டீஸ்வரி புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டார். அதன்பேரில் சி.ஐ.டி. போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை பிடிக்க குற்றம் மற்றும் புலனாய்வு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பர்ன்வால் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், சுபம் சுந்தரகோஷ் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.
டெல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கல்விநாதன் (வயது 29), ஜவுளிக்கடை உரிமையாளர் ககன்குமார் (32) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
கல்விநாதன், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை பூர்வீகமாக கொண்டவர். ககன்குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தற்போது டெல்லியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்விநாதன், ககன்குமார் ஆகியோர் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து 4 நாட்கள் தங்கி உள்ளனர். அப்போது அவர்கள் புதுவையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தி அந்த ஏ.டி.எம். மையத்தில் சாமுண்டீஸ்வரி பயன்படுத்திய ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை தெரிந்துகொண்டனர். பின்னர் போலி ஏ.டி.எம். கார்டு மூலமாக சாமுண்டீஸ்வரி வங்கி கணக்கில் இருந்த பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.மேலும் பல போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து புதுவையில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கல்விநாதன், ககன்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி ஏ.டி.எம். கார்டு மூலமாக மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மீண்டும் டெல்லியை சேர்ந்தவர்கள் போலி ஏ.டி.எம். கார்டு மூலமாக பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.